நலமா?
வாடா மல்லி நிறம் சேலை அணிந்திருந்த ஒரு வயதான அம்மா என் முன் இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருந்தார், அந்த சேலை நிறத்திலேயே அவரது காதணியில் இருக்கும் கற்கள், அவர்கள் முகமோ வாடி இருந்தது. சுருக்கங்கள் நிறைந்து நரைத்த முடியுடன் காணப்பட்டாலும், நிம்மதி இல்லாமல் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார். தூரத்தில் இருக்கும் ஊரிலிருந்து வந்திருப்பார் என்று அவர் செயல்களில் இருந்து தெரிந்தது. அவருடன் அவரது பேரனும் வந்திருந்தான், அந்த இளைஞனுக்கு கவலையே இல்லை, அமைதியான அந்த இடத்தில் காற்றாடியின் சத்தமும், மனிதர்கள் நடக்கும் சத்தமும், தூரத்தில் ஓடும் வண்டியின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த இளைஞன் வந்தபின் துப்பாக்கி சுடும் சத்தம் அவன் போனிலிருந்து நிறுத்தாமல் வந்து கொண்டிருந்தது. அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி, எதிரியை வீழ்த்தியதாலோ, மாய உலகில் சுதந்திரமாய் கொலை செய்வதாலோ தெரியவில்லை. ஆனால் அவன் பாட்டியின் நிஜ உலகை பார்க்க தவறி விட்டான் போலிருந்தது. சிறிது நேரத்திற்கு பின் "டோக்கன் நம்பர் 8" என்ற சத்தம் கேட்டதும், எழுந்திருக்க தயாராகி விட்டேன். மருத்துவர் இருக்கும் அறையை நோக்கி நடக்கும் போது, அந்த வயதான தாய் என் எதிரே நடந்து சென்றார்.
மருத்துவரை கண்டதும் ஒரு சிந்தனை, இதுவரை பார்த்த மருத்துவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்கிறார்களே, என் நோயை தீர்க்கும் அவர்களது முகம் எவ்வாறு இருக்கும் என்று?! "என்ன செய்கிறது" என்று கேட்டார், தொண்டை வலி, ஜுரம், தலைவலி, காய்ச்சல் என்று அடுக்கிக் கொண்டே இருந்தேன். "மாத்திரை போதுமா, ஊசி வேண்டுமா" என்று கேட்டதும், மாத்திரை என்று கூற என் தந்தையோ பின்னிருந்து ஊசி என்று சொல்லிவிட்டார். 23 வயது ஆன போதிலும் என் தந்தையே என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவச்சி ஊசியுடன் நின்று கொண்டிருந்தார் அவர்களை விட வளர்த்தியாக இருந்தாலும் அவர்கள் கையில் இருக்கும் ஊசிக்கு முன் சிருகிவிட்டேன், ஊசி என் சதைக்குள் செல்லும் தருணம், கண்களை இருக்க மூடி, வலி தெரியாமல் இருக்க பற்களை கடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். நிஜத்தில் வலி பெரியதாக இல்லை என்றாலும், வலிக்கும் என்ற எண்ணத்திலேயே இருந்ததனால், வலித்தது போன்ற ஓர் உணர்வு. வெளியே வந்து மருந்துகளை வாங்கிவிட்டு, வண்டியில் சென்று கொண்டிருந்தோம். "நாம் எதையும் மாற்ற வேண்டும், சரி செய்ய வேண்டும் என்று எண்ணாமல், எதுவாக இருந்தாலும் கடவுளிடம் ஒப்படைத்து விட வேண்டும்" என்றார் என் தந்தை. "ஏன்?" என்று கேட்டேன், "நம் தேவைக்கு அதிகமான பணம் நம்மை விட்டு சென்று விடுகிறது, புத்தாண்டில் இருந்து பணத்தை வேறு திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று நினைக்கவும், மருத்துவ செலவாகிவிட்டது" என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை, எண்ணங்கள் வந்தாலும் தொண்டை கரகரப்பாக இருந்ததினால் பேசத் தோணவில்லை.
வீட்டிற்கு வந்து, சாப்பிட்டு, மாத்திரை விழுங்கி விட்டு, எதையும் சிந்திக்காமல் நிம்மதியாக படுத்தேன். ஆனால் தூக்கம் வரவில்லை, வேலை செய்யாமல் சோம்பேறி ஆகிவிட்டனோ?, என்று எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. மாத்திரையின் செயல்படுவதை விட, என் சிந்தனை அதிகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அந்த சிந்தனை இரண்டு வருடங்களுக்கு முன் என்னை இழுத்து சென்றது, இதே போல் கட்டிலில் படுத்திருந்தேன், என்னால் பேச முடியவில்லை, உடம்பு கொதித்து கொண்டிருந்தது, தலைவலி தாங்க முடியவில்லை. ஆனால் நான் தங்கி இருந்த அறையில் யாரும் இல்லை, ஞாயிறு என்பதால் எல்லோரும் ஊர் சுத்த சென்றிருந்தார்கள். என்னுடைய தொண்டை சிவப்பாக இருந்தது, தண்ணீர் கூட குடிக்க இயலவில்லை, இதையும் தாண்டி புதிய பல் முளைக்கிறது, கோபம் வந்தாலும் பலம் இல்லை. என்னை கண்டுகொள்ள யாருமே இல்லை, இந்த உலகில் ஒருவர் கூடவா என் நலம் கருதவில்லை!, என்று மனதிற்குள் புலம்பி கொண்டிருந்தேன். சென்னையில் தனியாக வாழ்வது சுலபமல்ல போன்று தோன்றின முதல் தருணம். வீட்டில் இருந்தும் தொடர்பு கொள்ளவில்லை என்று வருத்தம். ஆனால், வீட்டை சார்ந்து இருக்கவே கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். காரணம் என் மாமா கூறின வார்த்தைகள், " நீ சிறிய பெண் இல்லை, உன்னை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும், ஏன் பெற்றவர்களை கவலைப்பட வைக்கிறாய்?" இதை கேட்டதிலிருந்து அவர்களை நானும் தொடர்பு கொள்ளவில்லை. கவலை, சோர்வு, தனிமை, இதை அனைத்திற்கும் மேல் அதிக தைரியம், என்னால் என்னை பார்த்துக் கொள்ள முடியும் என்று என்னுடைய மொத்த பலனையும் திரட்டி கிளம்பி நடந்தே அருகே இருக்கும் மருத்துவமனைக்கு சென்றேன்.
முக கவசம் அணிந்திருந்த மருத்துவர் என்னை சோதித்து, "காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. ரத்த அழுத்தம் குறைவாக இருக்கிறது, ஊசி போட வேண்டும், உங்களுடன் யாரும் வரவில்லையா?" என்றார். நான் "இல்லை" என்றேன். நான் இருக்கும் இடம் விசாரித்து நடந்து வந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டார் நானும் அவரிடம் நான் பார்த்துக் கொள்வேன் என்று தைரியமாக கூறினேன். ஊசி போட்டு சிறிது நேரத்தில் என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை, கண்கள் இருட்டினது, கண் விழித்து பார்க்கும்போது அங்கிருந்த கட்டிலில் படுத்திருந்தேன். குளுக்கோஸ் ஏரிக் கொண்டிருந்தது. மருத்துவர், "உன் தைரியத்தை பாராட்டுகிறேன், ஆனால் உன்னை அழைத்து செல்ல யாரையாவது கூப்பிட வேண்டும்" என்றார். அவர் முக கவசம் அணியவில்லை என்றாலும் அவரது முகம் தெளிவாக தெரியவில்லை, என் நினைவிலும் இல்லை, பின்பு நான் வேலை செய்யும் இடத்திற்கு போன் செய்தேன், அவர்கள் தூரத்தில் இருந்ததினால், என்னுடன் வேலை செய்யும் ஒரு சகோதரனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சகோதரனை மறக்கவே முடியாது. அவர்களுக்கு தொந்தரவாக இருந்து விட்டோமே என்று வருந்தினேன், ஆனால் அவர்களோ "தனியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள நினைக்காதே" என்றார்கள், எங்கிருந்தோ கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வந்தது, உடல் நலம் கருதியா, தனிமையை எண்ணியா, தைரியம் இருந்தாலும் தோற்றுவிட்டேனே என்பதிலா, தெரியவில்லை. அந்த சகோதரன் ஆறுதலாக பேசினாரா என்று தெரியவில்லை. சாதாரணமாக நடப்பது போல் எல்லாருடைய வாழ்விலும் இப்படி ஒரு தருணம் நிகழ்ந்திருக்கும் போல் என்னுடைய உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுமாறு பேசினார். எங்கிருந்தோ வந்த கண்ணீர் போன்று எங்கிருந்தோ ஒரு நிம்மதியும் வந்தது. வார்த்தைகள் நொடிப் பொழுதில் சிந்தனைகளுடனும், உணர்ச்சிகளுடனும், விளையாடுவதை உணர்ந்தேன்.
பின்பு எனக்கு உணவும் வாங்கி தந்து, வீட்டில் கட்டாயம் பேசு என்று சொல்லிவிட்டு, என்னை விடுதியில் பத்திரமாக விட்டு சென்றார். வீட்டில் பேச தோணவில்லை என்றாலும், சகோதரனின் வார்த்தைகளினாலும் அவர் மீது இருந்த மரியாதையில், கையில் குத்தி இருந்த ட்ரிப்ஸ் தடையத்தை, போட்டோ எடுத்து என் தந்தைக்கு போனில் அனுப்பினேன். அப்போதும், நான் கூப்பிட மாட்டேன் என்னால் தனியாக என்னை பார்த்துக் கொள்ள முடியும், வேண்டுமென்றால் அவர்கள் என்னை கூப்பிடட்டும் என்று ஆணவம். சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து போன் வந்தது.
மெத்தையில் இருந்து என் போன் ஒலித்தது, சுய நினைவுக்கு வந்தேன். என் தோழி "நாளைக்கு கல்லூரிக்கு வருவாயா? நலமா?" என்றாள்.

.jpeg)
.jpeg)
உன் வார்த்தைகளில் நேற்றைய வலிகளும் நாளைக்கான நம்பிக்கையும் தெரிகிறது..
ReplyDeleteநன்று.
Keep Writing !
Thank you
Delete